1. வீரநாராயணபுரம் அமுதமிகு, உத்தமமான, மாபெரும் காவிரிக்கு 'பொன்னி' எனும் அழகிய பெயரும் உண்டு. மழைத்துளிகளையே உணவாகக் கொண்டு முகிலைப் பாடும் வானம்பாடிப் பறவை வருந்துமாறு மழை பொய்த்துவிட்டாலும், பொன்னி நதி ஒருபோதும் பொய்க்காது[1]. அவள் பாயும் இடமெல்லாம் பொன்னைப் பொழிவது போல, நிறைந்த விளைச்சலை வாரி வழங்கி, மக்களைச் செல்வச் செழிப்பில் ஆழ்த்துவதால் அப்பெயர் பெற்றாள் என்பர். இப் பூவுலகில் வாழும் பல்லுயிர்களை நாள்தோறும் வளர்த்து, அவை உய்யும் வண்ணம் தன் அருளமுதை ஒரு தாயைப் போல ஊட்டுகிறாள். ஆதலால், அவளைக் காவிரித் தாய் என்றும் அன்புடன் அழைப்பர். குடகுமலையின் சாரலில் உள்ள பிரம்மகிரிப் பருவதத்திலிருந்து தலைக்காவிரியாய் உருண்டு, நீர்வீழ்ச்சிகளில் விழுந்து, புரண்டு, வேகமாகச் செல்லும் தன் போக்கில் ஆழமான வழியை அறுத்துக்கொண்டு விரைந்தோடிவரும் காவிரி, தன் அகன்ற ஆசைகளையெல்லாம் கொள்ள இடமில்லாமல், வட திருக்காவிரி, தென் திருக்காவிரி என இரண்டாகப் பிரிகிறாள். பின் தன் ஓட்டத்தில் நிதானம் கொண்டு, எப்போதும் தென் திசையில் இருக்கும் கோதையைத் தன் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டிருக்கும் அரங்கனுக்கு மாலையாகி,...