செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும் தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கர்நாடகா இருக்கும் திக்கை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கவேண்டும். காரணம் திரு நாராயணபுரம் என்ற மேல்கோட்டை. ஸ்ரீரங்கம் பெருமாளை ’நம்’ பெருமாள் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆனால் மேல்கோட்டை பெருமாளே ‘செல்ல’ப் பிள்ளை! இங்கே இருக்கும் பெருமாள் ’யதிராஜ’ சம்பத் குமாரன். இந்தப் பெயர்க் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன். ஸ்ரீரங்கத்தில் உடையவருக்கு கிருமிக்கண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பி மேல்கோட்டை அடைந்தார். அங்கு வசித்த காலத்தில், ஒரு நாள் தம்மிடம் இருந்த திருமண் முழுவதும் செலவழிந்துவிட்டது. வருத்தத்தில் இருந்த உடையவரின் கனவில் தோன்றிய பெருமாள், கல்யாணி புஷ்கரிணி அருகே ஒரு செண்பக மரத்தடியில், மரம் போல இருக்கும் பெரிய துளசிச் செடிக்கு அருகில் உள்ள புற்றுக்குள் தான் இருப்பதாகக் கூறி திருமண் கிடைக்கும் இடத்தையும் தெரிவித்தார். மறுநாள் காலை...