3.லோகசாரங்க மாமுனிவர் நாதமுனிகளும் யாத்திரிகர்களும் கோயிலை வலமாகச் சுற்றிவந்து வாசலை அடைந்தபோது, அங்கே இரு பக்த சிரேஷ்டர்கள் நின்றிருந்தனர். அவர்கள் அழகில் மயங்கி, இவர்கள் அஸ்வினி குமாரர்களோ என்று பாகவதர்கள் உற்றுப் பார்த்தனர். அவர்களின் முகச்சாயல் நாதமுனிகளின் வம்சத்தவர் என்பதை உணர்த்தியது. அவ்விருவரும் நாதமுனிகளையும், யாத்திரிகர்களையும் வணங்கினர். ’இவர்கள் யாராக இருக்கும்?’ என்று பாகவதர்கள் கேட்க நினைக்கும் முன்னரே, நாதமுனிகள், “இவர்கள் இருவரும் என் மருமக்கள், வரதாசாரியார் மற்றும் கிருஷ்ணமாசாரியார். எனக்குத் தெரிந்த வேதமும் இசையும் இவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன்” என்றார். “ஆஹா! தாங்களிடம் உபதேசம் பெறுவதற்கு இவர்கள் பெரும் பேறு பெற்றிருக்க வேண்டும். இவர்கள், [1]காளம், வலம்புரி என முழங்குவார்கள்[2] என்பதில் எங்களுக்கு ஐயம் இல்லை!” என்றார் ஒரு பாகவதர். “உங்கள் நல்வாக்கு அப்படியே பலிக்கட்டும்!” என்றார் நாதமுனிகள். அந்த வைணவர் எதை நினைத்துச் சொன்னாரோ நாம் அறியோம். ஆனால், இவர்களே பிற்காலத்தில் மேலையகத்தாழ்வான், கீழையகத்தாழ்வான் எனப் போற்றப்பட்டு, ஆழ்வார்களின் அருளிச்செயல்களை இசை வடிவி...