Desikan
இந்த தளம் பற்றி...
இந்த தளத்திற்கு வருகை தந்ததற்கு மிக்க நன்றி.10 ஆண்டுகளுக்கு முன் நான் விளையாட்டாக ஐந்து பக்கம் கொண்ட தமிழ் வலைதளத்தை tamil.net'ல் அமைத்தேன். அந்த காலத்தில் தமிழ் வலைதளம் மற்றவர்களுக்கு தமிழில் தெரியவேண்டும் என்றால் போன ஜென்மத்தில் நிறைய புண்ணியம் செய்திருக்க வேண்டும். என் வலைத்தளத்தை பாராட்டி வந்த ஈ-மெயிலை விட பூச்சி-பூச்சியாக தெரிகிறது என்று வந்த ஈ-மெயில் தான் அதிகம்.
என் வலைதளத்தில் சுஜாதாவின் சில கட்டுரைகளுடன் என்னுடைய அசட்டுத்தனமான கட்டுரைகளும் இடம்பெற்றன. அமெரிக்க அனுபவம், நான் வரைந்த சில படங்கள், சென்ற ஊர்கள் என்று தோன்றியவற்றையெல்லாம் எழுதினேன். தமாஷ் என்னவென்றால், நன்றாக இருக்கிறது என்று சிலர் பாராட்டியதுதான். அதானால் தலைகிறுக்கு ஏறி, இன்னும் கொஞ்சம் எழுத ஆரம்பித்தேன்.
தேவன், கல்கி, பாக்கியம் ராமசாமி எழுதிய சில நகைச்சுவை கட்டுரைகள், ஆழ்வார்கள் பற்றிய சில குறிப்புகளும் இடம்பெற்றன. கடந்த ஆண்டு வெயில் காலத்தில் ஒரு வலைப்பதிவையும் ஆரம்பித்தேன். வாரத்திற்கு ஒரு பதிவு என்று இன்றும் எழுதிக்கொண்டிருக்கேன்.
சுமார் ஐந்து வருடத்திற்கு முன் பிரபு ராமநாதன் என்று ஒரு நண்பர் அறிமுகமானார். அவர் என் பெயரில் ஒரு domain தருவதாகவும், அதில் என் வீட்டுப்பக்கத்தை கொண்டுவரவேண்டும் என்று விரும்பினார். அவரிடம் தொடர்ந்து கண்ணாம்மூச்சி விளையாடினாலும் என்னை அவர் விடுவதாக இல்லை. ஐந்து வருடம் என்னை துரத்தித் துரத்தி போன மாதம் எனக்கு என் பேரில் ஒரு domain வாங்கி தந்தார். நீங்கள் இதை படித்துக்கொண்டிருப்பது அதில் தான். அவருக்கு என் நன்றிகள்.
இந்த புது வீட்டில் வலைதளம், வலைப்பதிவு ஆகியவற்றை ஒன்றாக அமைப்பது என்று முடிவுசெய்தேன். முதல் கட்டமாக வலைப்பதிவை பழைய வீட்டிலிருந்து புது வீட்டுக்கு கொண்டுவந்துவிட்டேன்.
கொஞ்சம் கொஞ்சமாக என் வீட்டுப்பக்கத்தில் உள்ள சுஜாதாவின் கட்டுரைகளை இங்கு கொண்டு வர எண்ணம்.
இந்த தளம் முழுவதும் Blog:CMS'ல் இயங்குகிறது. யுனிக்கொடில் இருப்பதால் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது. இருந்தாலும் IE, Firefox இரண்டிலும் நன்றாக தெரியவேண்டும் என்று ஸ்ரீரங்கநாதரை அட்வாஸாக பிராத்திக்கிறேன்.
இது வரை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்.
அன்புடன்
தேசிகன்
23-08-2005
பெங்களூர்.






