Desikan

  • Back to Main page

Tuesday, 31.05.05

சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்

Image hosted by Photobucket.com "சாரி, பெஸ்ட் ஃபிரண்ட்". இது புத்தகத்தின் பெயர். இந்த புத்தகத்தை எவ்வளவு பேர் படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஆனால் நான் சமிபத்தில் படித்த ஒரு நல்ல சிறுகதை தொகுப்பு இது. ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் ஆங்கில பதிப்பு சில பள்ளிகளில் துணைப்பாடமாக இருக்கிறது.

இதில் பத்து சிறு கதைகள் மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது. அவை -

பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு - சாய் விடேகர்
மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா
சுரங்கப்பாதை - ஷமா ஃபியூட்டேஹல்லி
சிங்கத்துக்கு புத்துயிர் - கிதா ஹரிஹரன்
வெல்லும் அணி - சாவித்திரி நாராயணன்
பாட்டுக்கெல்லாம் ஒரு பாட்டு - ஸ்வப்னா தத்தா
சாரி, பெஸ்ட் ஃபிரண்ட் ஹேமாங்கினி ராணடே
ரிஷபனின் ராமன் - கீதா ஹரிஹரன்
பொம்மை - சாவன் தத்தா
மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் - ஷமா ஃபட்டேஹல்லி

இக்கதைகளை கீதா ஹரிஹரன் மற்றும் ஷாமா ஃபியூட்டேஹல்லி தொகுத்துள்ளார்கள். தமிழில் அழகாக மொழிபெயர்த்தவர் அ.குமரேசன். ஓவியங்கள் ரஞ்சன் தே. பாரதி புத்தகாலயம். 80 பக்கங்கள், விலை 25/= ( சரவணபவன் ஒரு மசால் தோசை + மினி காப்பியின் விலை )

ஒவ்வொரு கதையின் ஆரம்பமும் நம்மை கதைக்குள் இழுத்துச்செல்கிறது. (உத)

["நீங்க இந்த கதையை நம்பமாட்டீங்க. ஆனால் இது நிஜமா நடந்த கதைன்னு என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். ஏன்னா, நான் பாம்புபட்டிக்கு போயிருக்கிறேன். ... " - பாம்புப்பட்டிக்கு என்ன ஆச்சு]

["ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்து ஐந்தாம் ஆண்டில் அலிபாக் நகரின் வயல்வெளிகளில் நீங்கள் நடந்து சென்றிருந்தால் ஒரு விநோதமான காட்சியைக் கண்டிருப்பீர்கள். ஒல்லியான உருவம் ஒன்று வெள்ளைக் குறுந்தாடியுடன் கண்ணாடி அணிந்துகொண்டு அந்த வயல்களில் நடைபோடுவதை பார்த்திருப்பீர்கள்...." - மாங்கா மடையர்களும் தேங்கா மடையர்களும் ]

இந்த தொகுப்பில் உள்ள கதைகள், குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை விதியை புரிந்து கொள்ளவும் அதனுடன் இணைந்து வாழவும் அதனை அனுபவித்து மகிழவும் செய்கிற ஒரு முயற்சி. இந்தியாவில் குழந்தைகளுக்காக வெளியிடப்படுகிற பல புத்தகங்களுக்கு தற்போது இந்த புத்தகம் பாப்புலராக இருக்கிறது.

அத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையை இங்கு தந்துள்ளேன். படித்துப்பாருங்களேன்.

மாறிய விளக்குகள் - போய்லி சென்குப்தா

முதலில் அதை நான் விளையாடாகத்தான் எடுத்துக்கொண்டேன். தில்லி நகரின் ஜன்பாத் சாலைச் சந்திப்பில் தினமும் பத்திரிக்கை விற்கிற ஒரு பறட்டைத்தலை பையனோடு விளையாடுவதாகத்தான் எடுத்துக்கொண்டேன். அந்த வழியாக நான் சைக்கிளில் போகிறபோதெல்லாம் அவன் என் பின்னால் ஓடி வருவான். கையில் ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையை எடுத்து நீட்டிக் கொண்டு ஆங்கிலமும் இந்தியும் கலந்த வார்த்தைகளில் அன்றைய மாலைப் பொழுதின் செய்தித் தலைப்புகளைக் கூவுவான். இந்த தடவை நான் சைக்கிளை நடைபாதை அருகில் நிறுத்திவிட்டுஅவனிடம் ஹிந்திப் பேப்பரைக் கொடுக்குமாறு கேட்டேன்.

அவன் வாயைத் திறந்தபடி என்னையே பார்த்தான். "அண்ணா, உங்களுக்கு ஹிந்தி தெரியுமாண்ணா" என்று கேட்டான்.

பத்திரிக்கைக்கான காசை அவனிடம் கொடுத்துக்கொண்டே "தெரியுமே. ஏன் நீ என்ன நினைச்ச" என்று கேட்டேன்.

அவன் கொஞ்ச நேரம் சும்மா இருந்தான். அப்புறம் "உங்களப் பார்த்தா வெள்ளைக்காரரு மாதிரி இருக்கீங்க, அதான் கேட்டேன்" என்றான். " உங்களுக்கு ஹிந்தி படிக்க கூட தெரியுமாண்ணா?"

"நல்லாத் தெரியும்" என்று நான் பதில் சொன்னபோது கொஞ்ம் பொறுமை இழந்திருந்தேன்" என்னால் ஹிந்தி பேச முடியும், படிக்க முடியும், எழுதவும் முடியும். நான் பள்ளிக் கூடத்தில் படிக்கிறபாடங்கள் ஹிந்தி ஒரு சப்ஜெக்ட்" என்றேன்.

"சப்ஜெக்டா, அப்படீன்னா," என்று அவன் கேட்டான். பள்ளிக்கூடத்துக்கே போகாத ஒருவனிடம் சப்ஜெக்ட் என்றால் என்னவென்று எப்படி புரிய வைப்பேன்?" அது வந்து.." என்று நான் சொல்ல ஆரம்பித்தபோது சிக்னல் விளக்கு மாறியது. பச்சை விளக்கு எரிந்ததும் என் பின்னால் இருந்த வண்டிகளின் ஆரன் ஒலி நூறுமடங்காக அதிகரித்தது மற்ற வாகனங்களின் போக்குவரத்துடன் நானும் சேர்ந்து கொண்டேன்.

மறுநாள் அதே இடத்தில் அவன் நின்று கொண்டிருந்தான். கையில் ஒரு ஹிந்திப் பத்திரிக்கையை வைத்துக்கொண் என்னைப் பார்த்து புன்னைகைத்தான் "பய்யா, ஆப்கா அக்பார்..அப் பதாயியே யஹ் சப்ஜெக்ட் க்யா சீஸ்ஹை?" அவனுடைய உச்சரிப்பில் அந்த ஆங்கில வார்த்தை வித்தியாசமாக ஒலித்தது. அதற்கு ஆங்கிலத்தில் இன்னொரு பொருள் உண்டல்லவா, மற்றவரால் அடக்கி ஆளப்படுபவர் என்று அந்த பொருளைத் தருவதுபோல் அவன் உச்சரித்தான்.

"அதுவா, படிக்கிறதுக்கான பாடம்னு அர்த்தம்" என்று நான் சொன்னேன். அப்போது சிக்னலில் சிவப்பு விளக்கு வந்துவிட்டதால் தொடர்ந்து நான் அவனுடன் பேசினேன். "நீ எப்பவாவது ஸ்கூலுக்கு போய்யிருக்கியா?"

"இல்லீங்கண்ணா" , என்றான் அவன். அதற்கப்புறம் பெருமிதத்துடன், "நான் இவ்வளவு உசரம் இருக்கப்பவே வேலை செய்ய ஆரம்பிச்சிட்டேன்" என்று கூறியவன், என் சைக்கிள் ஸீட் உயர அளவைக் காட்டினான்" ஆரம்பத்திலேயேல்லாம் என் கூட அம்மா வருவாங்க இப்ப நானே தனியா வேலை செய்ய முடியும்"

"உன்னோட அம்மா இப்ப எங்க இருக்காங்க" என்று கேட்ட போது சிக்னல் பச்சை விளக்குக்கு மாறிவிட்டது. நானும் கிளம்பிவிட்டேன். ஆனாலும் அவன் எனக்கு பின்னால் எங்கேயோ இருந்தபடி"அவங்க இப்போ மீரட்டுலே இருக்காங்க, யார் கூட இருக்காங்க தெரியுமா.." என்று சொல்லிய மீதி வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட்டன.

அதற்கடுத்த நாள் அவன் "பய்யா என் பேர் சமீர்", என்றான் அப்புறம் மிகவும் வெட்கப்பட்டுக்கொண்டு உங்க பேர் என்ன" எனக் கேட்டான்.

அவன் சொன்னது வியப்பை எற்படுத்தியது. என் சைக்கிள் கூட சற்று ஆடிவிட்டது. "என் பேரும் சமீர்தான்" என்றேன். "அப்படியா!" அவன் கண்களில் மின்னல்
"ஆமா" என்று அவனைப் பார்த்து ஒரு மாதிரியாக சிரித்தேன். "சமீருங்கிறது அனுமாருக்கு இன்னொரு பெயர் தெரியுமா?"

"அப்ப நீங்க ஓண்ணாவது சமீர், நான் ரெண்டாவது சமீர்" என்று அவன் ஒரு வெற்றிக் களிப்புடன் சொன்னான்.

"அப்படியே வெச்சிக்கலாம்" என்று கூறிய நான் என் கையை நீட்டினேன். "கைகொடு ரெண்டாம் சமீர்!"

அவனுடையகை என் கைக்குள் ஒரு சின்னப் பறவைபோல அமர்ந்து கொண்டது. அப்புறம் நான் சைக்கிளில் போய்க் கொண்டிருந்த போது கூட அவனுடைய கையின் வெப்பத்தை என்கைக்குள் உணர்ந்து கொண்டேதான் இருந்தேன்.

அதற்கு அடுத்த நாள் அவனுடைய முகத்தில் வழக்கமாக என்னைப் பார்த்துக் புன்னகைகப்பானே அந்த புன்னகையைக் காணோம். "பய்யா, மீரட்டுல கலவரமாம் பய்யா. அங்கே நிறைய முஸ்லீம்களைக் கொன்னுட்டாங்களாம்"

அவன் கையில் இருந்த பத்திரிகையின் தலைப்புச் செய்தியைப் பார்த்தேன். "மதக் கலவரம்" என்று சுட்டெரித்தது அந்த செய்தி.

"ஆனா சமீர்.." என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தேன்.

"நான் ஒரு முஸ்லீம் சமீர் பய்யா எங்க சொந்தக்காரங்க எல்லாம் மீரட்டுலதான் இருக்காங்க" அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது. அவன் தோளை நான் தொட்ட போது அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அடுத்த நாள் அவனை அந்த சாலைச் சந்திப்பில் காணவில்லை. அதற்கடுத்த நாளும் காணவில்லை. அதற்கப்புறம் ஒரு நாள் கூட அவனைக் காணவில்லை. எந்த பத்திரிகையாலும், இங்கிலீஷ் பத்திரிகையோ, ஹிந்திப் பத்திரிகையோ எதனாலும் என்னுடைய இரண்டாம் சமீர் எங்கே போனான் என்று சொல்ல முடியவில்லை.

[ பாரதி புத்தகாலயம்2, குயவர் வீதி, ஜோன்ஸ் சாலை, சைதை, சென்னை-600 015. போன்: 24332424 இணையத்தளம்: www.tamizhbooks.com மின்னஞ்சல்: info@tamizhbooks.com ]

[read more]

Thursday, 26.05.05

பிரதாப முதலியார் சரித்திரம்

பிரதாப முதலியார் சரித்திரம் , புத்தக விமர்சனம் - ஹரன்பிரசன்னா

Image hosted by Photobucket.com
தமிழின் முதல் உரைநடை நவீனம் என்று சொல்லப்படும் பிரதாப முதலியார் சரித்திரம், மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டு 1879-ம் ஆண்டு வெளிவந்தது. தமிழின் முதல் உரைநடை நவீனத்தை வாசிப்பதிலே பெரும் ஆர்வம் கொண்டிருந்த நான், அதன் நடையையும் அதிலிருக்கும் வார்த்தைப் பிரயோகங்களையும் ஒருவாறு கற்பனை கொண்டு, படிப்பதற்கும் புரிந்துகொள்வதற்கும் பெரும் கஷ்டமாய் இருக்கும் என நினைத்திருந்தேன். புத்தகம் கையில் கிடைத்து அதை வாசிக்கத் துவங்கிய பின்பு, நான் செய்து வைத்திருந்த கற்பனை எத்தனை அபத்தமானது என்பது புரிந்தது. எவ்விதத் தங்குதடையில்லாமல் வாசிக்க முடிந்தது பெரும் ஆச்சரியமாய் இருந்தது. கிட்டத்தட்ட 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட ஒரு நாவலை வாசிக்கிறோம் என்கிற எண்ணமே பெரும் எழுச்சி தருவதாக அமைந்தது. புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தை வாசிக்கும்போதும் என் மூதாதையர் எனக்கு விட்டுச் சென்ற தனிப்பட்ட கடிதத்தைப் படிப்பது போன்ற உணர்வு தொடர்ந்து கொண்டே இருந்தது. 125 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட தமிழின் நவீனம் இன்னமும் சரளமாய் வாசிக்கக்கூடியதாகவும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது என்கிற எண்ணம் தந்த கிளர்ச்சியே இந்த நூலின் வாசிப்பனுவபம். தமிழின் உரைநடை, தமிழில் எழுதிவந்த எழுத்தாளர்களால் எத்தனைத் தூரம் மாறியுள்ளது, மேன்மை பெற்றுள்ளது என்பதை அறியவும், புனைவு என்பது யதார்த்ததின் அடுக்குகளில் இருப்பதுதானன்றி வேறில்லை என்கிற எண்ணம் கொண்ட இக்கால எழுத்துக்கும், புனைவு என்பது முழுக்க புனைவே என்கிற அக்கால எழுத்துக்கும் இடையே இருக்கும் தொடர்பைப் பற்றி ஆலோசிக்கவும் பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு ஆவணமாகிறது.

பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்கிறார்கள். இங்கே பிரதாப முதலியாரின் இளமையும் அவரின் மூதாதையர்களின் குறிப்பும், பிரதாப முதலியாரின் கல்வியும் விவரிக்கப்படுகிறது. கூடவே ஞானாம்பாளின் வாழ்வும் இதே வகையில் விவரிக்கப்பட, ஞானாம்பாளுக்கும் பிரதாப முதலியாருக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு ஒரு சிறு தடங்கலும், அதைத் தெய்வம் தாமே களைந்து வைப்பது போன்ற ஓர் உரைநடை உத்தியும் அதைத் தொடர்ந்து திருமணமும் என நகரும் கதை, ஞானாம்பாளும் பிரதாப முதலியாரும் சந்திக்கும் பிரச்சனைகளும், அதை அவர்கள் திறம்பட - தெய்வத்தின் துணையுடன் - தீர்த்துக்கொண்டு, ஞானாம்பாள் எப்படிச் சிறந்த "பத்தரை மாத்துத் தங்கமாக" விளங்குகிறாள் என்பதுடன் "சுப மங்களமாக" முடிவடைகிறது. இக்கதையை வாசிப்பவர்கள் எல்லாருமே வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார் ஆசிரியர்! கதையின் எல்லா நிகழ்வுகளுமே தெய்வத்தின் துணையுடனோ அதிர்ஷ்டத்தின் துணையுடனோ, பழங்காலத் திரைப்படங்களில் வருவது போல, பொன்னியின் செல்வனில் வந்தியத் தேவன் தொடர்ந்து தப்பித்துக்கொண்டும் வென்று கொண்டும் இருப்பது போல (மிகச் சரியாகச் சொல்வதானால் 'பிரதாப முதலியார் சரித்திரத்தில் வருவது போல பொன்னியில் செல்வனிலும் பழங்காலத் திரைப்படங்களிலும்' என்று மாற்றிச் சொல்லவேண்டும்) கதாநாயகனுக்கும் நாயகிக்கும் சார்பாகவும் அவர்கள் வெல்லும் வண்ணமும் அமைகின்றன. பிரதாப முதலியாரும் ஞானாம்பாளும் வென்று கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கும் பெரும் மனக்கிலேசமும் சோதனையும் நேரும்; சில அத்தியாங்களில் அதை அவர்கள் தாண்டியிருப்பார்கள். அதுமட்டுமன்றி கதாநாயகனைச் சேர்ந்தவர்களும் வென்றுகொண்டே இருக்கிறார்கள். அதிர்ஷ்டம் அவர்களுக்கு எப்போதும் துணை நிற்கிறது. எதிர்நாயகன் என்கிற தனிப்பட்ட ஒரு பாத்திரம் இல்லை. தேவையான இடங்களில் அவ்வப்போது எதிர்நாயகர்கள் தோன்றி, கதாநாயகன் வெல்லும்போது, அவனை வாழ்த்திவிட்டு அவனுடன் சேர்ந்துகொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு கதை சொல்கிறார்கள். இந்த உரைநடை நவீனத்தை "கதை" என்றே சொல்லவேண்டும். மாறி மாறிக் கதை சொல்கிறார்கள். பஞ்ச தந்திரக் கதைகளில் வருவது போல, கதைக்குள் கதையாகச் சொல்லிக்கொள்கிறார்கள். ஞானாம்பாள் இரண்டு அத்தியாங்கள் முழுவதும் அவளுக்குத் தெரிந்த கற்புக்கரசிகளின் கதைகளைச் சொல்கிறாள். பிரதாப முதலியார் ஒரு அத்தியாயம் முழுவதும் அவருக்குத் தெரிந்த கதைகளை, துணுக்குச் செய்திகளைச் சொல்கிறார். பிரதாப முதலியாரின் தாயார், மஞ்சள் மகிமை கொண்ட பெண்குலச் சிரோன்மணிகளின் கதைகளை வாயாரச் சொல்கிறார். இதை விட்டால் இன்னும் சில அத்தியாங்களில் துணுக்குகளாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். துணுக்குகள் இதைப் பற்றித்தான் என்றில்லை. ஞானாம்பாள் அரசியாக, அதிர்ஷ்டவசமாகத் தேர்ந்தெடுக்கப்படும்போது, ஒரு அரசனின் கடமைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகிறார். அப்போது அவர் லஞ்சம் பற்றியும் வழக்கறிஞர்களின் நேர்மையின்மை பற்றியும் தமிழ் புறக்கணிக்கப்படுவது பற்றியும் விடாது பேசுகிறார். 1879-இல் வந்த கதை என்பதை மனதில் கொள்ளவேண்டும். சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

பதிவிரதையைப் பாராட்டும் முகமான கதை என்கிற ஆதார விஷயத்தையும் முழுக்க முழுக்க புனைவு என்கிற ஆதார விஷயத்தையும் கொஞ்சம் புறந்தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படத் தொடங்கும். அதனால் இது தமிழின் மிகச்சிறந்த உரைநடை ஆவணங்களுள் ஒன்றாகிறது.

முதலில் இதன் நடையைச் சொல்லவேண்டும். இந்த உரைநடையில் ஒரு வரி எளிதில் முடிவடையாததாக இருக்கிறது. சில சமயம் ஒரு வரி ஒரு பத்தியாகிறது. அவள் சொன்னாள் என்று முடிந்துவிடவேண்டிய இடம் அவள் சொன்னபோது என்று தொடர்கிறது. இது அக்காலத்தின் உரையின் வடிவம். உரைநடை மணிப்பிரவாள நடையிலேயே அமைந்திருக்கிறது. சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் கலக்காத வரிகள் குறைவு என்கிற அளவிற்குத் தொடர்ந்து சமிஸ்கிருதமும் ஆங்கிலமும் உரைநடையில் வந்துகொண்டேயிருக்கின்றன. தமிழ் வார்த்தைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சிறு பத்திரிகைகளும் தமிழார்வலர்களும் எவ்வளவு தூரம் வென்றிருக்கிறார்கள் என்பதை அறிய இந்நூலை ஒப்புநோக்கலாம். இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள பல சமிஸ்கிருத வார்த்தைகள் இன்று வழக்கொழிந்துவிட்டன. சில வார்த்தைகளை பாரதியாரின் கட்டுரைகளில் காணலாம். அவையன்றி, புதியதாக, தமிழோடு சேர்த்து எழுதியும் பேசியும் வரப்பட்ட பல வார்த்தைகளை இந்நாவலில் காணலாம். இவையன்றி, புழக்கத்திலிருந்து அருகிவிட்ட நிறையத் தமிழ்வார்த்தைகளையும் காணலாம்.

அடுத்ததாக கவனிக்கவேண்டியது ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு. வாய்விட்டுச் சிரிக்கும் அளவிற்கு சில இடங்களில் நாவலாசிரியரின் திறமை பளிச்சிடுகிறது. துணுக்குகள் பலவற்றை ஆசிரியர் ஆவணப்படுத்தியிருக்கிறார். தமிழின் முதல் உரைநடை நவீனம் என்ற அறிவிப்போடு அவர் இதைச் செய்திருப்பதால், அவை கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற போதும், அவற்றை ஆசிரியர் எழுதியிருப்பது, ஓர் ஆவணம் என்கிற வகையில், அறிந்துகொள்ள ஆர்வமூட்டுவதாகவும், இன்னமும் இந்தக் கதைகளை மையமாக வைத்துப் பட்டிமன்றங்களிலும் திரைப்படங்களிலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று அறியக்கூடியதாகவும் உள்ளது. வாய்வழிக் கதைகள் அப்போது முதல் இப்போது வரை விடாமல் கடத்தப்பட்டு வருகின்றன. நாம் இப்போதும் சொல்லிச் சிரித்துக்கொள்ளக்கூடிய துணுக்குகளை இந்நாவலில் காணலாம். நாம் இன்றும் கேட்டுச் சிரிக்கும் கதைகள், நம் முன்னோர்களால் அன்றும் சிலாகிக்கப்பட்டது என்கிற உணர்வு, முதலில் நான் சொன்னதுபோல பேரெழுச்சித் தருவதாய் இருந்தது. இந்த உணர்வே இந்த நாவலை நான் படிக்கும்போது தொடர்ந்து வந்தது, மையச் சரடாக. அவற்றில் சில துணுக்குகள் இன்றையத் திரைப்படங்களிலும் காணக் கிடைக்கின்றன! ஒருவகையில் தமிழ்த் திரைப்படங்கள் 1879-இல்தானே இருக்கின்றன என்று நினைத்துக்கொண்டேன்!

நாவல் வாசிப்பவர்கள் யாரும் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டு விடக்கூடாது என்பதை ஆதர்சமாக வைத்துக் கதை எழுதியிருக்கிறார் வேதநாயகம் பிள்ளை. கதையின் தொடர்ச்சியை விடாமல் போதிக்கிறார். ஒன்றிரண்டு அத்தியாங்கள் விட்டுபோனாலும் அடுத்த சில அத்தியாங்களில் விட்டுப் போன இடத்திலிருந்து தொடர்ந்து வந்து, கதையின் நகரும் சரடோடு இணைத்துக்கொள்கிறார். விட்டுப் போன சங்கிலிகளை விடாமல் சேர்த்து இணைப்பது போல. இதே உத்தியினை பொன்னியின் செல்வனிலும் காணலாம். வாசகர் எவ்விதக் குழப்பத்திற்கும் ஆட்பட்டுவிடக்கூடாது என்பதே முக்கியக் குறிக்கோளாக இருப்பவர்கள் செய்யும் விஷயமிது. மேலும் முதல் உரைநடை நவீனம் என்பதால் அவர் அதிகச் சிரத்தை எடுத்து இதைச் செய்தது புரிந்துகொள்ள முடிகிறது.

நாவலின் சில இடங்கள் சிறந்த சிறுவர் கதைக்கான களமாக விளங்குகின்றன. பொன்னியின் செல்வனை நான் சிறந்த சிறுவர் நாவல் என்றே சொல்லுவேன். ஒருவகையில் பிரதாம முதலியார் சரித்திரம் கூட அப்படித்தான். எல்லாவற்றையும் வலிந்து வந்து ஊட்டி, எளிதாக்கிவிடும் உத்தி அப்படிப்பட்ட எண்ணம் அளித்திருக்கலாம். சில கதைகளும் துணுக்குகளும் சில இடங்களும் சிறுவர்களுக்குச் சொல்லி உற்சாகப்படுத்த முடியக்கூடியவை. ஒரு வீரன் பிரஸ்தாபிக்கும் துணுக்கு ஒன்று, "தலை இல்லாததால் காலை மட்டும் வெட்ட முடிந்தது" என்கிற ஹாஸ்யத்தைப் பேசுகிறது. விக்கிரமபுரியில் பிரதாப முதலியார் சிக்கிக்கொள்ள, அங்கிருக்கும் மக்கள் பிரதாப முதலியாரின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள், சிறுவர் ஹாஸ்ய நூலுக்கானவை. அவை தீர்க்கப்படும் முறைகள், சிறுவர் விவேக நூலுக்கானவை.

நாவலில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம் லஞ்சம் பற்றிய அத்தியாயங்கள். ஞானாம்பாள் அரசனாக (ஆம்! அரசியாக அல்ல. அரசனாக. அவள் ஆண் வேடம் பூண்டு அரசாள்கிறாள்!) ஆளும்போது செய்யும் உபதேசங்களும், தான் செய்யவேண்டியதாக அவள் கொள்ளும் ஆக்ஞைகளும். அதில் முக்கியமாக அவள் லஞ்சம் பற்றிப் பேசுகிறாள். இதைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், நாம் இன்னும் 1879-இல்தான் இருக்கிறோம். அக்காலத்திலேயே "இக்காலத்தில் கலி முத்திப் போச்சு" என்று சலித்துக்கொள்ளும் வசனங்கள் பற்றிச் சிரித்துக்கொள்வேன். அது இந்நாவலிலும் தவறாமல் இடம்பெறுகிறது. இன்னொரு விஷயம் வக்கீல்களின் தொழில் நேர்மையைப் பற்றியது. அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று ஞானாம்பாள் "பிரஸ்தாபிக்கிறாள்." இவையும் எவ்வித மாற்றமுமில்லாமல் அப்படியே இக்காலத்திற்குப் பொருந்திவருகிறது!

நாவலில் ஞானாம்பாள் தமிழ் பற்றிப் பேசுகிறாள். இரண்டு வக்கீல்கள் ஆங்கிலத்தில் வாதிடும் முறையை விமர்சிக்கும்போது, தமிழின் மேன்மைகளும் வழக்கொழிந்துபோன சமிஸ்கிருதம் மற்றும் இலத்தீன் மொழிகளை விட தமிழ் எவ்விதம் சிறப்பு வாய்ந்தது என்பதையும் பேசுகிறாள். இதை ஆசிரியரின் தமிழுணர்வாய்க் காணலாம். ஆனால் அதை அவரது நடையில் காண இயலவில்லை. வெகு இயல்பாக வக்கீல் என்றும் பீசு என்றும் இன்ன பிற ஆங்கில வார்த்தைகளை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார். மேலும் "அவைகள்" என்றும் "மெள்ள மெள்ள" என்றும் (மட்டுமே) எழுதியிருக்கிறார். (சுஜாதா கவனிக்கவேண்டும்.)

சர்வ சாதாரணமாக நாவலெங்கும் துலுக்கன் என்றும் சக்கிலியன் என்றும் கையாளப்பட்டிருக்கிறது. வண்ணான், அம்பட்டன், தோட்டி போன்றவர்களுக்கு ஆசனம் கொடுப்பது ஏற்புடையதல்ல என்கிற கருத்தும் ஓரிடத்தில் வருகிறது.

1879-இல் ஆங்கிலேயர்களின் மீதான வெறுப்பு எவ்விதம் இருந்தது என்பதை இந்நாவல் கொண்டு அறியமுடியவில்லை. இந்நாவல் நானறிந்த வரையில், ஆங்கிலேயர்களின் அடி போற்றுவதாகவே அமைந்துள்ளது. நேரடியான புகழ்ச்சி வைக்கப்படவில்லை எனினும், சில நிகழ்ச்சிகள் மூலம், அவர்கள் பரிபாலனை செய்வதில் தவறில்லை என்றே ஆசிரியர் நினைக்கிறார் என்று எண்ண வழிவகுக்கிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியைப் பற்றி எதிர்மறை விமர்சனம் வைக்கப்படாததால் இப்படி எடுத்துக்கொள்ளத் தோன்றியதோ என்னவோ. ஆங்கிலேய நீதிமான்களின் விசாரனையின் போதோ வேறு சில ஆங்கிலேயர்கள் சம்பந்தப்பட்ட இடங்களிலோ ஆசிரியர் தம் கருத்தையோ அல்லது வேறொரு கதாபாத்திரத்தின் மூலம் எதிர்க்கருத்தையோ வைக்கவேயில்லை.

தமிழின் முதல் உரைநடை நவீனம் மூன்றாம் பார்வையில் எழுதப்படாமல், பிரதாப முதலியாரின் "சுயசரிதம்" போல தன் கூற்றிலேயே சொல்லப்படுகிறது.

தேவையான இடங்களில் வேதநாயகம்பிள்ளை விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறார். ஆசிரியர் கிறிஸ்துவர் என்பதால் இருக்கலாம். ஆனால் கதையின் வேறெந்த இடங்களிலும் இதை இனம் காண முடியவில்லை. மதம் பற்றிய மேன்மையான கருத்துகள் ஒவ்வொரு இடங்களில் இடம் பெற்றாலும், எதிர்மறைக் கருத்துகளே இல்லை.

நமது கலாசாரம் என்பது பெண்களின் பத்தினித் தன்மையும், கணவனுக்கும் குடும்பத்திற்கும் சேவகம் செய்வதும் என்று சொல்லும் நூல், ஒரு பெண் அரசனாகவும் நின்று சாதிக்க முடியும் என்றும் சொல்கிறது. சில மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளும், விதவை மறுமணத்திற்கு ஆதரவான ஒரு கருத்தும் சோதிடம் பொய் என்பதான விவாதமும் கதையினூடே வந்து போகின்றன.

யதார்த்த கதைகளிலிருந்து ஒரு மாறுபட்ட கதையை, ஆம்!, "கதையை" வாசிக்க விரும்புகிறவர்கள் வாசிக்கலாம். நான் இந்நாவலை வாசிப்பதற்கு முன்பு, எனக்கு சென்டிமென்டலாக இருந்த எண்ணம், தமிழின் முதல் உரைநடை புனைவை வாசித்தே ஆகவேண்டும் என்பதே. இதே எண்ணமுள்ளவர்கள் நிச்சயம் வாசிக்கலாம்.

நன்றி: ஹரன்பிரசன்னா

* வேதநாயகம் பிள்ளை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், வைகை பிரிண்டர்ஸ் & பப்ளிஷர்ஸ், 6/16, புறவழிச்சாலை, மதுரை.
* வேதநாயகம் பிள்ளை, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை, பக்கங்கள்: 368

[read more]

Thursday, 19.05.05

லொஸ்கு

"Nothing is real" என்ற Beatles பாடலை விக்கிரமாதித்தன் பாடிக்கொண்டு வந்தான்.
"என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு" என்றது வேதாளம்.
"ஒண்ணுமில்லை, சும்மா தான்"
"ஒண்ணுமில்லையா?"
"ஒண்ணுமில்லைதான் ஆனா ஒண்ணுமில்லையிலே ஏகப்பட்டது இருக்கு"
"சரி ஒரு முடிவோட வந்துட்டே சொல்லிதொலை" என்றது வேதாளம்.

ஆங்கிலத்தில் 'நத்திங்'(Nothing), 'நாட் எனிதிங்(not anything) என்று பொருள். தமிழில் ஒன்றுமில்லை. இந்த 'ஒன்றுமில்லாத'தற்கு நிறைய சொற்கள் இருக்குறது - காலியான, பூச்சியம், வெறுமை, அவாந்தரம், சூனியம், சுத்தசூனியம், ஒன்றுமில்லை, பூரை, லொஸ்கு, ஆகாசமயம்..

பார்க்கப் போனால் எல்லா துறைகளிலும் இந்த 'நத்திங்' இருக்கிறது. ஆங்கில அகராதியில் இதற்கு என்ன பொருள் என்று பார்த்தால் - nil, none, nulliform, nullity, noughts... என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது.

சுருக்கமாக ஒன்றுமில்லாததில் எல்லாம் இருக்கிறது - பூச்சியம்/ஸைபர்(Zero/Chiper), ஸீரோ பாய்ண்ட்ஸ்(Zero points), ஸீரோ ஹார்(Zero Hour), வெற்றிடம்(vacuous), காலியான(void), சூனியப்பிரதேசம்(vacuum), nihilist(எதிலும் நம்பிக்கை இல்லாதவர்கள்), nihilarians(முக்கியமில்லாததில் ஈடுபடுவர்கள்), nihilagents( ஒன்றும் செய்யாதவர்கள்),nullifideans(எந்த மதத்திலும் நம்பிக்கையில்லாதவர்கள் ) nonentities( இல்லாத ஒன்று) nobody(ஒருவருமில்லை ) என்று பட்டியல் நீள்கிறது. செய்திதாள்களில் ' Zeros' பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் அவை Zero dividend preference sharesசை குறிக்கும்.

நமக்கு புரியாத சுற்றிவளைக்கப்பட்ட ஸீரோக்களும் இருக்கிறது. உதாரணம் டென்னிஸில் 'love'; இந்த 'love'வை கொஞ்சம் ஆராய்ந்தால், அது ஃபிரென்சில் "l'oeuf' என்ற வார்த்தையின் மறு. ஃபிரன்சில் l'oeuf என்றால் முட்டை என்று பொருள். பூச்சியத்தின் வடிவம். சிலருக்கு முட்டை என்றால் கணக்கு மார்க் ஞாபகம் வரலாம். எது எப்படியோ லவ் என்றால் பூச்சியம் என்பது உண்மை. அதாவது உங்கள் பர்ஸ் காலியாகும் ஆகும். இதே போல் - கிரிகெட்டில் 'nought'; ஸாக்கரில் 'nil';

cipher என்ற சொல் இன்னும் கொஞ்சம் சுவாரசியமானது. அது பூஜ்யத்தையும், சங்கேத பாஷையின் குறியீட்டை(க்ளு) குறிக்கும் சொல்லாக இருக்கிறது. இதை வைத்துக்கொண்டு ஒரு சின்ன விளையாட்டு

"U 0 a 0, but I 0 thee
O 0 no 0, but O 0 me.
O let not my 0 a mere 0 go,
But 0 my 0 I 0 thee so."

டிஸைபர்(decipher) செய்தால் என்ன வரும் என்பது கடைசியில்

ஒன்றுமில்லாதது எல்லாம் ஒன்றுமில்லை என்று ஒதுக்கமுடியாது. சிலவற்றுக்கு சிறப்பு பொருள் உண்டு. ஃபிரன்ச் ஹுகினாட்ஸ்(huguenots) லூயி(Louis) XIV மன்னரிடம் தப்பித்து சென்றபோது தங்களுடைய பெயரை 'Nimmo' என்று வைத்துக்கொண்டனர். ne mot என்ற லத்தீன் சொல்லிலிருந்து வந்தது Nimmo. 'அனாமிகா' போல் பெயரற்ற என்று பொருள். கிரேக்கம், கிறுத்துவம், வேதம் ஏல்லாவற்றிலும் இந்த ஒன்றுமில்லாதது இருக்கிறது.

பூச்சியம் என்ற வட்டவடிவம்
உயர்த்தியது எண்களை பத்துமடங்கு
நெற்றியிலிட்ட வட்ட பொட்டால்
கூடியது அவள் அழகு பத்துமடங்கு

என்ற சமஸ்கிருத கவிதை ஒன்று இருக்கிறது !

இப்படி ஒவ்வொரு துறையிலும் இந்த ஒன்றுமில்லாததை பார்த்தால் ஏதோ ஒன்றை விளக்குவதற்கு ஏற்பட்ட சொல் நாளடைவில் பல முக்கியமானவற்றை விளக்க பயன்படுத்தப்பட்டது என்பது புரியும்.

இயற்பியலில் வெற்றிடம்(Vacuum) முதலில் ஒன்றுமில்லாத இடத்தை குறித்தது, பிறகு Augustine அதை கிட்டத்தட்ட ஒன்றுமில்லை என்றார் பிறகு அது வாயுமண்டலத்திற்கு மேற்பட்ட பரந்த ஆகாயவெளியில் (ether) மிதந்தது. ஐன்ஸ்டீனிடம் அது மறைந்துபோனது, பிறகு இருபதாம் நூற்றாண்டில் கிவாண்டம் துறையில் இயற்கையை விளக்குகிறது.

எழுத்தாளர்களும் இந்த ஒன்றுமில்லாததை விட்டு வைக்கவில்லை. எல்பர்ட் ஹப்பார்டு (Elbert Hubbard) "Essay on Silence" என்ற புத்தகத்தில் வெறும் வெத்துப்பக்கங்கள் இருந்தது. 1974ல் பல பதிப்புக்கள் கண்ட "The Nothing book" என்ற புத்தகத்திலும் வெறும் வெத்துப்பக்கங்கள். வேடிக்கை என்னவென்றால் மற்றொரு வெற்றுபுத்தகத்தின் ஆசிரியர் இவர் மேல் காப்பிரைட் வழக்கு தொடர்ந்ததுதான்.

'போலோ மிண்ட்'டில் (Polo Mint) போலோவைவிட அதன் ஒன்றுமில்லாத ஓட்டையைதான் அவர்கள் கடந்த நாற்பது வருடமாக மார்கெட்டிங் செய்துள்ளார்கள். ஷேக்ஸ்பியர் இந்த நத்திங்கை வைத்து நிறைய விளையாடியிருக்கார். "Much Ado About Nothing" என்ற அவரது நாடகம் ரொம்ப பிரசித்தம். அவருடைய நாடகத்தில் நிறைய இடத்தில் இதை ஆராய்ந்துள்ளார். உதாரணத்திற்கு

"Is this nothing?
Why, then the world and all that's in't is nothing;
My wife is nothing; nor nothing have these nothings,
If this be nothing"
The Winters Tale

ஜேம்ஸ் பாண்ட் 007 என்ற நம்பருகும் முன்னும் ஒன்றுமில்லாத அந்த ஸீரோக்கள் இருக்கிறது !.

நீங்கள் இதை படிக்கும் சமயம் உங்கள் கணினி எவ்வளவு 'null operation' செய்கிறது என்று யோசித்து பாருங்கள்.

மேலே சொன்னதை டிஸைபர் செய்தால் கிடைக்கும் விடை:

"You sigh for a cipher, but I sigh for thee
O sigh for no cipher, but O sigh for me.
O let not my sigh for a mere cipher go,
But sigh for my sigh, for I sigh for thee so."

"சரி இந்த ஒன்றுமில்லாத தகவல் இன்னிக்கு எதற்கு" என்றது வேதாளம்
"ஒண்ணுமில்லை இன்றோடு வலைப்பதிவு ஆரம்பித்து ஒரு வருடம் ஆகிறது" என்றான் விக்கிரமாதித்தன்.

Ref:
"The Book of Nothing" by John Barrow.
John D. Barrow is research professor of mathematical sciences in the Department of Applied Mathematics and Theoretical Physics at Cambridge University. His previous books include Theories of Everything, The Artful Universe, Impossibility, Between Inner and Outer Space, The Universe That Discovered Itself, and The Origin of the Universe. He lives in England.

[read more]

Desikan - pencil 18:51:00 - வேதாளம் - pencil Permalink -Comments: 5 [15.02.06 15:11]

Monday, 16.05.05

பணம் காசின் பரிணாமம்

பணம் காசின் பரிணாமம் - எஸ்.வி. ராமகிருஷ்ணன்

ஓரிடந் தனிலே
நிலைநில்லாது லகினிலே
உருண்டோடிடும்
பணங்காசெனும்
உருவமான பொருளே

’வேலைக்காரி’ படத்தில் (1949) ஒரு பாடல்.

Image hosted by Photobucket.comஎனக்கு ஏழு வயது ஆனபோது (1944) ஒரு அசாதாரணமான சம்பவம் நிகழ்ந்தது. அதுதான் ஓட்டைக் காலணாவின் பிறப்பு.
காலணா என்பது ஒரு ரூபாயின் 1/64 பகுதி. இன்று அதற்கு அர்த்தமே இருக்க முடியாது. ஆனால் அன்றைய தேதியில் அதற்கு மிட்டாயோ தேங்காய் பர்பியோ வாங்க முடியும். ‘சின்னக் கிளாஸ் பசங்களிடம்’ அதிகமாகப் புழங்கியது காலணாக்கள்தான். காலணாதான் குழந்தைகளின் அடிப்படை நாணயமென்றே சொல்லலாம். அதுவரையில் வழங்கி வந்த காலணாவுக்கான செப்பு நாணயங்கள் பெரிதாகவும் கறுத்துப் போயும் சில சமயங்களில் பச்சைக் களிம்பு பிடித்தும் காணப்படும். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய விக்டோரியா மகாராணியின் காலணாவிலிருந்து என் காலத்தின் ஆறாம் ஜார்ஜ் சக்கரவர்த்தி படம் பொறித்த காலணா வரையிலும் இதேபோலத்தான் இருந்தன. ஆனால் திடீரென்று முளைத்த புதிய காலணாவோ அதுவரை கேட்டிராத அதிசயமாக நடுவில் பெரிய ஓட்டையுடன் ‘வாஷர்’ மாதிரி விளங்கியது. பளபளவென்று தங்கம்போல் மின்னியது. இது குழந்தைகளின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டதில் அதிசயம் இல்லை. அதே சமயம், பெரியவர்களின் பார்வை வேறு விதமாக இருந்தது. அரசாங்கம் ‘பாப்பர்’ ஆகிக் கொண்டிருக்கிறதுபோல் இருக்கிறது என்று பலரும் சொன்னார்கள். ஆங்கிலேயே ஆட்சி அஸ்தமிக்க ஆரம்பித்துவிட்டதென்றுகூடப் பலருக்குத் தோன்றியிருந்தால் அதுவும் நிஜமே. உண்மையில் யுத்த காலச் செலவுகளால் ‘போண்டி’யாகிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்திய அரசுக்குக் குறைந்த செலவில் மட்டமான நாணயங்களைத் தயாரிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அதனால் தாமிரச் செலவு குறைந்ததென்றால் அரசாங்கத்தின் மதிப்பும் தாழ்ந்து போயிற்று.

[read more]

Desikan - pencil 18:45:00 - பொது - pencil Permalink -Comments: 3 [26.04.07 13:34]

Wednesday, 11.05.05

வேதாளம்'s Day Out

காலை பத்து மணிக்கு , வேதாளம் விக்கிரமாதித்தனை எழுப்பியது.
"நானும் உன்னோட இன்னிக்கு ஆபிஸ் வரேன்" என்றது.
அதிர்ச்சியில் விக்கிரமாதித்தனுக்கு தூக்கம் கலைந்தது "என்ன நீயா ? No way" என்றன்.
"நான் வ-ரே-ன்" என்று அழுத்தமாக சொல்லியது வேதாளம்.

ஜீன்ஸ்-T-Shirt- Nike ஷூவுடன், காலை பதினோறு மணிக்கு தூக்கக்கலகத்துடன் விக்கிரமாதித்தன் வேதாளதுடன் ஆபிஸுக்கு சென்றான். கதவிற்கு பக்கத்தில் தன் ஐடி கார்டை தேய்த்து, "குவிக்" சத்தத்திற்கு பிறகு உள்ளே சென்றான். ஏசி காற்று மேல் அடித்தது. வேதாளம் சினிங்கியது. "இது என்ன நாய் செயின் மாதிரி" என்றது வேதாளம். "நக்கலா ? இது தான் ஐடி கார்ட்" என்றான் விக்கிரமாதித்தன்.

வேதாளம் "என்ன எவ்வளவு லேட்டா ஆபிஸ் போறேயே" என்றது .விக்கிரமாதித்தன் பெருமையாக "you know we have flexi-timings" என்றான்.

விக்கிரமாதித்தன் தன் இருக்கையில் உட்கார்ந்தான். அவன் தோளின் மேல் வேதாளம் உட்கார்ந்தது. பக்கத்து இருக்கைகள் காலியாக இருந்தது. தூரத்தில் யாரோ இரண்டு மூன்று பேர் கண்ணுக்கு தெரிந்தார்கள்... பிசிக்கு இடது பக்கத்தில் இருந்த பலகையில் விக்கிரமாதித்தனுக்கு வந்த "பர்த்டே கார்டு" பின்னால் குத்தப்பட்டு இருந்தது. பக்கத்தில் பீர் ஒரு கப்பில் நிறம்பி வழிந்து கொண்டிருந்த போஸ்டர் ஒன்று ஒட்டபட்டிருந்தது அதற்கு மேல் ஃசாப்ட்வேர் பற்றி ஒரு அசட்டு ஜோக். பிசிக்கு வலது பக்கத்தில் கறைபடிந்த காப்பி மக்.

விக்கிரமாதித்தன் பிசியின் மேல் ஒரு சின்ன பொம்மை இருந்தது "With love .." என்று கீழே எதோ பெயர் போடப்பட்டிருந்தது. விக்கிரமாதித்தன் பிசியை சுற்றி "Post-it" மஞ்சள் காகிதத்தால் பார்டர் போல் ஒட்டப்பட்டிருந்தது. வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை "உங்களுடைய ஆபிஸ் Paper-less ஆபிஸ்" கிடையாதா ? என்றது. விக்கிரமாதித்தன் சிரித்துக்கொண்டு "இதெல்லாம் ஒட்டினாதான் நான் ரொம்ப பிஸி என்று மற்றவர்களுக்கு தெரியும்" என்றான். விக்கிரமாதித்தன், தன்னிடைய பிசியை Boot செய்தான். "சரி, பிசி boot ஆவதற்குள் ஒரு காப்பி எடுத்துக்கொண்டு வந்துவிடலாம்" என்று மக்குடன் பேண்டரி பக்கம் போனான்.

மக்கை அலம்பாமல் அப்படியே வெண்டிங் மிஷினில் காப்பியை நிறப்பிக்கொண்டு, தன் இருக்கைக்கு வந்து சேர்ந்தான் விக்கிரமாதித்தன். சிலர் வந்திருந்தார்கள். காப்பியை உறுஞ்சிக்கொண்டே. " hai guys, how do you do ?" என்றான் விக்கிரமாதித்தன்.
"Great, ya, you know y'day we went out... we should go together sometime da" என்றான் பக்கத்தில் இருந்தவன். பக்கத்தில் இருந்த பெண் தனக்கு தன் மேனேஜரிடமிருந்து வந்திருந்த ஈ-மெயிலை படித்து "balls to him" என்றாள். எல்லோரும் சிரித்தார்கள். வேதாளம் அதிர்ச்சியில் பார்த்தது. வேதாளத்தின் டிஜிடல் கைகடிகாரத்தில் சரியாக 11:17am என்று காட்டியது. விக்கிரமாதிதன் தன் பிசியில் தனக்கு வந்திருந்த ஈ-மெயிலை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தான். முதல் ஈ-மெயில் அண்டார்டிக்காவில் ஒரு குழந்தை Madras-eyeயால் அவதிப்படுவதாகவும், இந்த மெயிலை உங்களுக்கு தெரிந்தவர்களிடம் Fwd செய்யும்மாறு வேண்டுகோள் அதில் இருந்தது. விக்கிரமாதித்தன் அந்த ஈ-மெயிலை குப்பையில் போட்டான்.

ஹெட் போனை எடுத்து மாட்டிக்கொண்டான் தலையை ஆட்டிக்கொண்டே, வேலை சம்பந்தமான ஈ-மெயிலை படிக்க ஆரம்பித்தான்.
வேதாளம் "என்ன கேட்க்குற" என்றது. ஹெட் போனை கழட்டி வேதாளத்தின் காதில் வைத்தான் அது "தேவுடா தேவுடா" என்றது.

அதற்குள் பக்கத்தில் இருந்த பெண் "Oh-Shit, I have a delivery today" என்றாள். வேதாளம் பதறியது "இன்னிக்கு டெலிவரியை வைத்துக்கொண்டு வேலைக்கு வந்திருக்கா என்ன தொழில் பக்தி" என்றது. "சும்மா இரு, டெலிவரி என்றால் இது அந்த டெலிவரி இல்லை, இது ஃசாப்ட்வேர் டெலிவரி" என்று விளக்கினான் விக்கிரமாதித்தன்.

"You know today, i have not received a single personal mail" என்று வருத்தப்பட்டுக்கொண்டான் விக்கிரமாதித்தன். பக்கத்தில் உள்ள பெண் அதை கேட்டு அவனுக்கு இரண்டு மெயிலை fwd செய்தாள். "Oh - Great-ya" என்று அவள் அனுப்பிய சர்த்தார்ஜி ஜோக்கை மூன்றாவது முறையாக படித்து சிரித்தான். தன் நண்பர்களுக்கு அதை "fwd" செய்தான். வேதாளத்திற்கு ஒன்றும் புரியவில்லை. பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்த கிச்சா எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான் அவன் யாருடனும் பேசவில்லை.

"ok-ya, i have lots of work" என்றான் விக்கிரமாதித்தன். "can we go for a coffee" என்றாள் அந்தப் பெண். எல்லோரும் எழுந்தார்கள். விக்கிரமாதித்தன் 'Screen-Saver'ரை ஆன் செய்தான் அதில் "I am busy...." என்று ஓடத்தொடங்கியது.

எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள். காப்பி உருஞ்சிக்கொண்டே

"you-know ya, rajesh who went to SCT is now getting 3K more"
"ya he is in J2EE, he fwd me a joke from his office email id"
போன்ற பேச்சுக்கள் முடிந்தவுடன் திரும்பவும் இருக்கைக்கு வந்தார்கள்.

வேதாளம் மணியை பார்த்தது. 12:45pm என்று காமித்தது. விக்கிரமாதித்தன் ஒரு மெயிலை திறந்தான். அதில் அவன் மேனேஜர்
"Can you give me your estimate for ... " என்று ஏதோ கேட்டிருந்தார்.
"I have to investigate further to give any meaning full estimates.... so ...atleast i need... "என்று ரிப்ளை செய்தான்.
விக்கிரமாதித்தன் பக்கத்தில் இருந்த கிச்சா தொடர்ந்து எதையோ சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான்.

மணி 1:00pm. "ok-ya- lets grab some thing quickly. I have lots of work to do" என்றாள் அந்த பெண். எல்லோரும் பெல்லடிதார்போல் எழுந்தார்கள். லஞ்ச் முடித்து திரும்பியவுடன் வேதாளம் மணியை பார்த்தது 2:34pm என்று காமித்தது. "oh! its late for the meeting" என்று சிலர் எழுதுப்போனார்கள். சிலர் இண்டர்நெட்டில் இன்றைய தலைப்புச்செய்தியை பார்த்தார்கள், அந்த பெண் லைப்ரரிக்கு போனாள். கிச்சா தொடர்ந்து சீரியஸாக படித்துக்கொண்டிருந்தான். கிச்சா போல் சிலர் இருப்பதால் தான் ஃசாப்ட்வேர் தொழில் நடக்கிறது என்று வேதாளம் நினைத்துக்கொண்டது.

மீட்டிங்கில் விக்கிரமாதித்தன் தன் பாஸ்சை பேர் சொல்லி கூப்பிட்டது வேதாளத்திற்கு ஆச்சரியமாக இருந்தது. விக்கிரமாதித்தன் தான் செய்யும் வேலைக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை என்றான். எவ்வளவு என்று செல்லவில்லை. எல்லோரும் ஒரு மணி நேரம் கழித்து, அடுத்த வியாழன் 3:00pm திரும்பவும் மீட்டிங் என்று முடிவி செய்தார்கள். பின்னர் விக்கிரமாதித்தன் அந்த டாப்பிக்கை ஆரம்பித்தான். அது "டீம் லஞ்" எல்லோரும் ஒரு மணதாக வரும் வியாழன் அன்று ஒரு சைனீஸ் ரெஸ்டாரண்டுக்கு போகலாம் என்று முடிவு செய்தார்கள். இதனால் அவர்களுடைய மீட்டிங்கை வெள்ளிக்கிழமைக்கு மாற்றி அமைத்தார்கள். வேதாளம் மணியை பார்த்தது 4:17pm என்றது.

மீட்டிங்கை விட்டு வேளியே வந்த விக்கிரமாதித்தன். "It is hectic ya" என்று எல்லோரையும் காப்பிக்கு அழைத்தான். எல்லோரும் பேண்டரிக்கு சென்றார்கள்.
திரும்பவும் வந்த போது விக்கிரமாதித்தனுக்கு அவன் நண்பனிடமிருந்து மெயில் வந்திருந்தது. அதை படித்து ரிப்ளை செய்தான்.

கிச்சா மட்டும் சிரியஸாக எதையோ படித்துக்கொண்டிருந்தான்.

naan ippo busya ..irukken la... not fair....
naane... apparam... call panren saiyaa......

....hows is the chick you told last time....
what else da.....hows work?
call me on my mobile after 7:30pm ok vaa ....
என்று எதோ எழுதி அனுப்பினான். அனுப்பியவுடன் அவனுக்கு ஒரு போன் வந்தது.

"ya. its me. why did you not call me y'day?"
"...."
"oh!, we are also going on thursday.... how is the food out there..."
"...."
"great....how is your new mobile"
"..."
"oh! man......
"...."

வேதாளத்தின் மூஞ்சியில் கலவரம் தெரிந்தது, அது போனை கட்செய்தது. விக்கிரமாதித்தன் கோபமாக அதை பார்த்தான். மணி இப்போது 5:15 என்றது. அவனுக்கு மற்றொரு மெயில் வந்திருந்தது.

 

 

கிச்சா படித்து முடித்து எதையோ டைப் செய்து கொண்டிருந்தான்.வேதாளம் எட்டிப்பார்த்து அதை படித்தது. படித்தவுடன், தலை லைட்டாக வலித்தது. பாக்கெட்டில் இருந்த சிகப்பு நிற கிரோசின் பெயின் கில்லரை அவசரமாக எடுத்துப் போட்டுக்கொண்டது.

மணி 6:30pm, "gotta go baby... otherwise the traffic is goin to get me crazy" என்று கூறிய விக்கிரமாதித்தன், வேதாளத்தை பார்த்தான். வேதாளம் மண்டியிட்டு கடவுளிடம் பிராத்தனை செய்துக்கொண்டிருந்தது. விக்கிரமாதித்தன் "என்ன பிராத்தனை செய்கிறாய்" என்று கேட்டான். "அடுத்த ஜன்மம் என்று ஒன்று இருத்தால் நான் ஒரு ஃசாப்ட்வேர் என்ஜினியர் ஆகவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டேன்" என்றது.

விக்கிரமாதித்தனுக்கு தன்னுடைய ஃசாப்ட்வேர் அனுபவத்தில் மேலும் ஒரு நாள் கூடியது.

[read more]

Desikan - pencil 18:50:00 - வேதாளம் - pencil Permalink -Comments: 4 [04.01.06 13:58]

Newer articles:

07.06.2005

03.06.2005

Older articles:

10.05.2005

03.05.2005

26.04.2005

13.04.2005

10.04.2005

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
தேன்கூடு.காம்
Back to Main page